இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழகத்தின் நாகர்கோயிலில் விருட்சமாக வளர்ந்து நின்ற ஒரு புளியமரத்தைச்சுற்றி நிகழும் கதையை இற்றைக்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னவர் சுந்தரராமசாமி. இக்கதை விஜயபாஸ்கரன் சிறிது காலம் நடத்திய சரஸ்வதி இதழில் தொடராக சில அத்தியாயங்கள் வௌிவந்தது. சிற்றிதழ்களுக்கு வழக்கமாக நேர்ந்துவிடும் இழப்பிலிருந்து அந்த சரஸ்வதியும் தப்பவில்லை. அதனால், சுந்தரராமசாமி அதனை முழுநாவலாகவே எழுதி முடித்து 1966 இல் வெளியிட்டார். அதன் முதல் பிரதி வெளியானபோது கல்கி இதழில் சிறந்த நாவல்களின் வரிசையில் ஒரு புளியமரத்தின் கதை பற்றிய சிறிய அறிமுகத்தை படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். உடனே அதனை கொழும்பில் வாங்கி வாசித்தேன். அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், காட்சிகள் மனதில் மங்கிப்போன சித்திரமாகவே வாழ்ந்தன. அதில் வரும் ஆசாரிப்பள்ளம் சாலையை ஏனோ மறக்கமுடியவில்லை.
அதன்பின்னர் சுந்தரராமசாமியின் கதைகள், நாவல்கள், கட்டுரைகளையும் நேர்காணல்களையும் படித்திருந்தாலும், அவரது முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை கனவாகவே மனதில் நீண்டிருந்தது. மெல்பன் வாசகர் வட்டத்தை கடந்த இரண்டு வருடகாலமாக ஒருங்கிணைத்துவரும் தீவிர இலக்கிய வாசகி திருமதி சாந்தி சிவகுமார், தொலைபேசியில் அழைத்து, “இந்த மாதம் சு.ரா.வின் புளியமரத்தின் கதை பற்றி பேசப்போகின்றோம் “ எனச்சொன்னதும் வியப்படைந்தேன்.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல், பல பதிப்புகளையும் கண்டது. அத்துடன் இந்திய மொழிகளிலும் ஒரு சில பிறநாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதுடன், நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கத்தக்க நாவல் என்று சிலாகித்தும் பேசப்பட்டது. மெல்பன் வாசகர் வட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக்கொண்டாடுமுகமாக கடந்த ஞாயிறன்று வாசகர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இலக்கியப்பிரதிகளை அயராமல் தொடர்ந்து வாசித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்துவரும் தீவிர வாசகர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்திருந்தனர்.
மிலேனியம் வருடத்திற்கு முன்பின்னாக பிறக்கும் ஒருவர் வாசகராகும் பட்சத்தில், அது என்ன ஒரு புளியமரத்தின் கதை..? அந்தமரத்தில் என்ன இருக்கும்? அது எப்படி வளரும் ? அதன் பயன்பாடு என்ன ? தாவரவியல் பாடத்திற்கான எளிய விளக்கங்களுடன் அமைந்த நூலா..? எனவும் கேட்கவும் கூடும்!