– முனைவர் ஆர். தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால், உன்னதமான பல ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்ற துடிப்பில் அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மிகவும் விரும்புவது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆங்கிலக் கவிகளான ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த், பைரன், W. B. யேட்ஸ் போன்ற கவிகளின் எழுத்துக்கள். அதனுடன், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பொன்மொழிக்கேற்ப, பயணம் மேற்கொண்டு பல நாடுகளில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மற்ற நாடுகளின் மேன்மைகள், மாறுபட்ட கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள மிகுந்த ஆவல் கொண்டவர். இதுவரைக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வெளி நாடுகளையும் , இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் பற்றி அறிந்து கொள்ள பயணம் சென்று வந்தவர். உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முனைப்புடன் இருப்பவர். அவரின் இந்தக் கட்டுரையானது பெண்ணின் படைப்பு என்பதே ஒட்டுமொத்த மனித குலத்தின் நலத்தைப் பேணிப் பராமரித்துக் காக்கத்தான் என்ற நோக்கில், இல்லத்திலும், சமூகத்திலும் பெண்கள் தங்களைச் சார்ந்திருப்போரின் உடல்நலம் காப்பதில் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. –
“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!” – மகாகவி பாரதியார்
மனிதகுலம் உருவானது பற்றிய கற்பனைக்கதைகள் அல்லது ஒருவேளை கட்டுக்கதைகள் என்றாலும் கூட, அவற்றின் மூலம் இன்றைய சமுதாயம் ஆதி முதலாக உதித்த ஆதாம் மற்றும் அவனின் அன்புக்குப் பாத்திரமான ஏவாள் முன்னொருகாலத்தில் ஜீவித்திருந்திருப்பார்கள் என்றும் அவர்களைக் கடவுள் தனது கண்ணின் மணிகளாகக் கருதி அவரின் ஈடன் தோட்டத்தில் எல்லாவித சலுகைகளையும் பெற்று, கவலையற்று சுற்றித் திரிந்து வாழ்வை அனுபவிக்க முழுசுதந்திரமும் முதலில் கொடுத்திருந்தார் என்று இன்றளவும் பெரிதும் நம்பும்அளவு செய்திருக்கிறது. மனித குலம் முழுமைக்கும் மூதாதையரான அவர்களின் அப்படிப்பட்ட சுதந்திரமும், மற்றட்ட மகிழ்வும் இரண்டாக பிளவுபட்டு துக்கித்து நிற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் பாம்பு வடிவச்சாத்தானின் கேடு விளைவிக்கும் தூண்டுதலால் என்பதும் அனைவரும் அறிவர்.
இந்தக் கதை, கற்பனையாக இருந்தாலுமே, இது தோன்றிய காலம் முதலில் இருந்தே, ஏவாள் சாத்தானின் முகஸ்துதியில் மயங்கி தன் அன்புத் தோழனை வற்புறுத்தி கடவுள் தடை செய்த கனியைச் சுவைக்கச் செய்ததினால், அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டு, ஈடன் என்னும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, துக்கமும், துன்பமும் நிறைந்த புதிய உலகான பூமி வாழ்வை அடைய நேரிட்ட காரியத்தைப் பற்றி பல்வேறு தீவிர விமர்சனங்கள் என்றென்றும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கற்பனைக்கதையில் வரும் ஏவாள் எனும் பெண்ணானவள் துரோகம் செய்யத்தூண்டும் குற்றவாளியாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆயினும் இந்தக் கதையில் உள்ள நேர்மறையான ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தோமானால், ஏவாளின் பழம் சுவைக்கும் விருப்பம் வெளிப்படையாக மேலோங்கி நிற்பதுடன், அதிலும், மனித குலத்துக்கு மிகச் சிறந்த ஆரோக்யத்தைக் கொடுக்கக் கூடிய ஆப்பிள் கனியை, ஒரு ஆப்பிளை தினமும் சுவைத்தால், மருத்துவரை தூரத் தள்ளி வைக்கலாம் என்று இன்றளவும் உலா வரும் பழமொழிக்கேற்ப, அவளின் அன்புக்கணவனை வற்புறுத்தி சுவைக்கத் தூண்டிய செயல் தெளிவாகப்புலப்படும்.