‘தன்னையறிதல்’ என்பது தத்துவத்தளத்தில் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகி வருகின்ற கருத்தாகும். சுயத்தை அறிந்து கொள்வது, சுயத்தை வரையறை செய்வது என்பதெல்லாம் மற்றவைகளை (Others) அறிந்து கொள்வதோடும், மற்றவைகளை வரையறை செய்வதோடும் தொடர்புடைய செயல்பாடாகவே இருப்பதை இன்றைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதத்தன்னிலையும் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, மற்றவைகளைத் தனக்கு ஏற்றாற்போல் வரையறை செய்வதில் கவனமாக செயல்படுகின்றன.
மனித சமுதாய வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸியர்கள் கண்டுணர்ந்த பிறகு, பெண்ணியம், தலித்தியம், பின்காலனியம் போன்ற சிந்தனைகளும் மானுட வரலாற்றில் நடைபெற்றிருக்கின்ற ஒடுக்குமுறைகளை, போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைகள் ஆயுதப்போராட்டங்கள் மூலமாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் நடைபெறுவதை மேற்கண்ட சிந்தனைகள் சுட்டிக்காட்டியபிறகு மனித சமுதாயத்தின் கருத்தியல் சட்டங்களை ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது என்பது உண்மையாகும்.
மேட்டிமைச்சக்திகளால், ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரத்தை செலுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கருத்தியல் சட்டகங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றாக ‘பண்பாட்டு அரசியலை’ (Cultural Politics) நிகழ்த்துகின்றன என்று இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியா கிராம்சி கூறும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இந்தியச்சூழலில் பால் அடிப்படையிலும், மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கான கருத்தியல் சட்டங்களை வழங்குகின்ற பணியைச் செய்பவையாக இந்து மதத்தின் பல்வேறு புனிதப்பிரதிகள் திகழ்கின்றன. இந்தப் புனிதப்பிரதிகளின் கருத்தியல் மேலாண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற அறிஞர்கள் பல்வேறு தளங்களில் விமர்சனப்படுத்தியுள்ள நிலையில், ஆண் எனும் தன்னிலை தன்னுடைய மற்றமையாகக் கருதும், பெண்ணின் உடலைப் பெறுதல் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மோகினித்தொன்மத்தைச் செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் இக்கட்டுரை ஆராய்கிறது.
உடல்களின் மாற்றம் பற்றிய மீமானுடக்கதைகள் தொன்மங்களிலும் நாட்டார்வழக்காறுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், இவைகளைப்பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. அந்தவகையில் மேல்நாட்டு ஆய்வாளர் பிரந்தாபெக் மற்றும் ஏ.கே.ராமனுஜன் ஆகியோர் சாதிய அடிப்படையில் உடல்கள் பெறும் மாற்றத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி நரசிம்ம அவதாரம், பாகம்பிரியாள் ஆகியவைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உளப்பகுப்பாய்வு அடிப்படையில் பிள்ளையார் தொன்மத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.
Continue Reading →