பதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்!

- ‘அசை’ சிவதாசன் -‘பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –


பதிவுகள் தை 2009 இதழ் 109
அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே.

அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.

சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.

‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!

Continue Reading →

கானல் காட்டில் கவிதையும் கவிகளும்!

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –


கானல்  காட்டில்  கவிதையும் கவிகளும்!

பதிவுகள் ஆகஸ்ட் 2005 இதழ் 68 மன வெளிப்பாடுகளுக்கான ஒரு உயரிய சாதனம் கவிதை மொழியாகும் . கவிதை செய்தல் என்பது கலை . கலை அழகின் செறிவு , கருத்தின் பதிவு : மகிழ்ச்சியின் உறைவிடம் ப:ண்பாட்டின் , வளர்ந்த நாகரிகத்தின் சின்னம் . இந்தக் கலையின் பிறப்பிருப்பிடம் இயற்கை இந்த இயற்கை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற கொடைக்கானல் மலைத்தொடரில் அமைந்திருக்கும் கானல் காட்டில் கவிதைகளும் , கவிகளும் ஜுன் 18 , 19 தேதிகளில் முகாமிட்டிருந்தனர் . கல் கற்பிக்கிறது சிற்பிக்கு . வர்ணங்கள் ஓவியனுக்கு என சொல்லிக் கொண்டு போகும்போது சிற்பம் , ஓவியம் , இசை , நடனம் , பஞ்சபூதம் , மனித தேக விஞ்ஞானம்  , மரம் , செடி கொடி , சின்ன ரீங்காரத்திலிருந்து நுட்பமான பறவை ஒலிகள் , உயர்ந்த மரங்கள் வண்ணப்பூக்கள் , முட்புதர்கள் என இயற்கை சார்ந்த  அத்தனையும் கவிஞனுக்கு ஏதாவதொன்றை கற்பித்துக்கொண்டேயிருக்கிறது . பலசமயம் இயற்கையின் சமீபம் கிட்டாமல் , ஒரு அறைக்குள் முடங்கிக் கொண்டு , ஜன்னல் வழியே தவணை முறையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு நல்லதொரு செறிவான , மாறுபட்ட , சந்தோஷமான அனுபவமாக அமைந்தது இந்த இரண்டு நாள் மூகாம் .

18 ஆம் தேதி காலை பட்டிவீரன்பட்டியில் நடந்த காலை கூட்டத்தில் , அந்தப் பகுதியைச் சார்ந்த கவிஞர்களின் கவிதை வாசிப்பும் , தொடர்ந்து திரு. மாலன் ,திரு. பொன்னீலன் அவர்களின் உரையும் இடம் பெற்றது . பகல் உணவிற்கு, ஒரு வேன் மற்றும் இரண்டு கார்களில் கானல் காடு பயணம் . பகல் உணவை முடித்துக் கொண்டு ,“அறிதலும் ஆக்கமும்” என்ற அறிமுக , மற்றும் கவிதை பற்றிய விவாதத்திற்கான அமர்வை எழுத்தாளர் திரு . மாலன் தொடங்கிவைத்தார் . கவிஞர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டு கவிதைகள் { இரண்டு மட்டும் }வாசிக்கும்படி  கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்  . கவிதை வாசிப்பில் பங்கு பெற்றவர்கள் வைகை செல்வி , கிருஷாங்கிணி , திலகபாமா , தேவேந்திர பூபதி , பா . வெங்கடேசன் ,நித்திலன் , மதுமிதா , இந்திரன் , பா. சத்திய மோகன் , ஆர் . வெங்கடேஷ் , மாலன்,  ரெங்கநாயகி . அறிமுக உரையுடன் நிறுத்திக்கொண்டார் பிரம்மராஜன் . திரு . பழமலய் எழுதிய கவிதையை அவர் மாணவர் ஒருவர் ஒப்பித்தார் { பாராமல் } என்ன காரணமோ வாசித்த கவிதைகள் விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை.

கவிதை வாசிப்புக்குப்பின் திரு . மாலன் ‘கவிதை செய்தல் / கவிஞனின் பார்வை’ என்ற பொதுவான அம்சங்களோடு விவாதத்தை தொடங்கிவைத்தார் . மரபிலிருந்து விலகி ,நகர்ந்து கொண்டிருக்கும் கவிதை பற்றியும் , புதுக்கவிதை தனக்கென்று ஏதாவதொரு இலக்கணத்தைக் கொண்டிருக்கிறதா என்பது பற்றியும் பேசினார்கள் . தற்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதைகளை “நவீன கவிதை “  என்றே குறிப்பிடவேண்டும் என்றார் பிரம்மராஜன் . இந்த நவீன கவிதைபற்றிய விவாதம் “private poetry & public poetry” என்று தொடர்ந்தது . private poetry என்பதை கடுமையாக சாடி அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துப் பேசினார் கவிஞர் பழமலய் .       தற்போதைய கவிதைகள் private poetry என்று சொல்லும்படியாக , அக வயக் கவிதைகளாக இருக்கின்றன . தன் விருப்பம் , தன் சோகம் , தன் கோபம் என்று கவிஞன் தன்னைப்பற்றிய பிரஸ்தாபிக்கும் private poetry யை விட , சமுதாயப் பிரக்ஞை கொண்ட public poetry {?} மேலானது என்ற ரீதியில் பேசினார் பழமலய் . இதற்கு எதிர்வினையாக தன்வயப்பட்டு கவிதை செய்யும் அத்தனை கவிஞனும் கவிஞனின் கனவு திரும்பத் திரும்ப கவிதை வழியாகச் சொல்லப்படும்போது சுற்றி நடக்கும் தவறுகள் நின்று போகவும் வாய்ப்பு உண்டு . கிட்டத்தட்ட கவிஞன் ஒரு influence ஆகச் செயல் படுகின்றான்  என்ற ரீதியில் பேசியவர் , கவிஞனின் பிரக்னை , ஆதர்சம் எல்லாமே உலகம் முழுவதும் இனிமையும் அமைதியும் பரவ வேண்டும் என்ற கனவு மட்டுமே இந்தக் கனவு காண்பது , கவிதை வழி அதை express செய்வதுதான் கவிஞனின் வேலை என்று ஏன் இதை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பேசினார் . அப்போதுதான் கவிஞர்களைச் சுற்றியிருக்கும் “ஒளிவட்டம்” பற்றிய பேச்சு மறுபடியும் எழுந்தது . {தொடக்கத்தில் திரு . மாலன் குறிப்பிட்ட ஒளிவட்டம் மொழியின் உயரிய வெளிப்பாடன கவிதையாத்தலை செய்து வரும் , “இருண்மைத்தன்மை” என்ற வாசகக் கருத்துக்கு பதிலாகவே இந்த “ஒளிவட்டம் “ என்ற அம்சத்தை நாம் எடுத்துக்கொள்ளக்கூடும் : வித்வத்கர்வமே அந்த ஒளிவட்டம் மற்றும் அதில் தவறில்லை என்பதான விவாதம் தொடர்ந்தது . கவிஞர் , மதுமிதாவிற்கு இந்த “ஒளிவட்டம்” பற்றிய ஐயம் கடைசிவரை இருந்துகொண்டே இருந்தது .     மறுபடியும் , மரபு மீறல் மட்டுமே புதுக்கவிதையாகுமா என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது (. ஒரு ‘இன்ஃபார்மல்’ முகாம் என்பதால் அட்டவணைப்படியான விவாதங்களோ , கலந்திரையாடலோ நடக்க வாய்ப்பில்லை } வெறும் மரபு மீறல் கவிதையாத்தலில் இருக்க முடியாது : கூடாது . மரபுடைத்தல் என்பது மற்ற டிஸிப்ளினில் {அதாவது இசை , ஓவியம் என்ற மற்ற கலைகளில் நடக்கும் பொழுதுதான்  (நடந்தாலொழிய)  இலக்கியத்தில் , குறிப்பாக கவிதையில் , :வரலாறு ரீதியான “ மரபுடைத்தல் சாத்தியமாகாது என்று குறிப்பிட்டார் பிரம்மராஜன் .

Continue Reading →

கவிதையென்பது…

- திலகபாமா -‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்


-பதிவுகள் மே 2005 இதழ் 65
வாழ்வில் என்றும் மாறாதிருப்பது மாறுதலே என்றொரு சொற்றொடர் உண்டு. தாயாண்மை சமுதாயம் தொடங்கி தாயின் பின்னால் சமூகம் பயணிக்கத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எத்தனை மாறுதல்கள்  வாழ்வியலில், கலாசாரத்தில், கொண்டிருக்கின்ற கருத்தியலில். ஆனால் மாறுகின்ற எல்லாவற்றிலும் பின்னும் மாறாமல் இருப்பது வாழ்வதற்கான ஆர்வம் மட்டுமே. அந்த வாழ்தலுக்கான ஆர்வமே கவிதையென்று எனக்குத் தோன்றுகின்றது. இந்த சமூகத்தில் உருவாக்கப் பட்டிருக்கின்ற வாழ்க்கை என்பது காலத்திற்கேற்ப பல்வேறு கருத்தியல்கள் விழுமியங்கள் இவற்றால் கட்டமைக்கப் படுகின்றது. மாறுகின்ற காலங்களில் கட்டமைக்கப் பட்ட நமது பலங்கள்,.., பலவீனங்களாக உருமாறும், காலாவதியாகும். அதை அடையாளம் கண்டு புணரமைப்பது காலத்தின் கட்டாயமாக சமூக பிரக்ஞை உள்ளவர்கள் உள்ளத்தில் விதையாக விழுகின்றது. அப்படியான வாழ்க்கை , இயல்பாய் இருக்கின்ற உணர்வுகளின் பேரில் முரண்படுகின்ற போது மனிதனது சிந்தனைகள் கேள்விகள் எழுப்புகின்றன. பொருளை , வணிகமயமாக்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய வாழ்வில் உருவாக்கப்பட்ட வாழ்வின் பிண்ணணியில்  நன்மை, தீமை , இருள் ஒளி என்று எல்லாமே  விரவிக் கிடக்க நன்மைகளை இருத்த வைக்க ஒளியோடு வாழ்ந்து விட என்று இருவேறு முரண்பாடுகளின் பிண்ணணியில் நிகழும் போராட்டங்கள் உணர்வுகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட உணர்வுகள் எழுப்பும் கேள்விகள் விசாரணைகள் பதிவுகள் , கட்டுரைகளக, செய்தியாக கதைகளாக நாவல்களாக வரலாம் . ஆனால் அவற்றின் சாராம்சம் மனதுக்குள் தேங்கிக் கிடந்து இதுதான் காரணம், இதுதான் தேவை என்று ஒரு மையப் புள்ளியை சுற்றிக்  கடைய எங்களுக்குக் கிடைக்கின்ற தேவாம்ரிதமே கவிதை என்று எனக்குத் தோன்றுகின்றது.

அக உணர்வுப் பாடல்களிலிருந்தும் பிரிக்க முடியாது அரசியலையும் சமூகத்தையும் பிரதி பலித்து , கவிதையை காலத்தின் பதிவாக தந்து விட்டுப் போன சங்கப் பாடல்கள், கணிகையர் குல வழக்கத்திருந்து மீண்டு வர கேள்விகளும் , எத்தனையோ காலங்களின் பின்னும் காலாவதியாகாத கண்ணகி மணி மேகலை பாத்திரங்களை தந்து போன சிலம்பும், இசையை அடிப்படையாக கொண்டிருந்த கவிதை விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் பண்டிதர்க்கான சொத்தாக இருந்த இடமிருந்து பாமரனை வந்து சேர்ந்தடையச் செய்த பாரதி கவிதைகளும், பின்னாளில்,  விடுதலைக்குப்  பின்னான வாழ்வியலில், மேலைத் தேயப் போக்குகள் உள் வந்த போதும், சங்க இலக்கியத்தின் மரபுத் தொடர்ச்சியே புதுக் கவிதை என அதற்கொரு அங்கீகாரம் தேடித் தந்த  பிச்சமூர்த்தியின் கவிதைகள்  இப்படியான ஒரு கவிதை பாரம்பரியத்திற்கு  பிறகு, இன்று  உத்திகளை மட்டுமல்லாது  மேலைத் தேயநாடுகள் உபயோகப் படுத்தி, தேயப் பண்ணி தூர எறிந்த விடயங்கள் உள்ளே வர  கவிதை பற்றி  பேசி விட வேண்டிய சூழல் , விமரிசகனுக்கும், படைப்பாளிக்கும் நேர்ந்திருக்கின்றது.

என் வரையில் வெகு இயல்பாகச் சொல்லப் போனால் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றோடு  புதிதாய் வாழ்வின் நிர்பந்தங்களின் பிண்ணணியில் வந்து நிற்கும் என் சிந்தனைகள் , முரண்படத் துவங்கும் இடத்தில் என் கவிதைபிறக்கின்றது என்றே உணர்கின்றேன்.

Continue Reading →

பெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்

ஸ்ரீரஞ்சனிபல்வேறு கனவுகளுடன் திருமணபந்தத்தில் இணைபவர்கள் தங்களின் கனவுகளுக்கேற்ற வாழ்க்கை ஒன்று அமையாதபோது அதைச் சகித்துவாழக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் பிரிந்துகொள்கிறார்கள். இதுதான் சகமனித நேசிப்பு இருப்பவர்களின் செயலாக இருக்கிறது. ஆனால், சுயநலமிக்கவர்களோ தாம் அழிந்தாலும் பரவாயில்லை, கூடவாழவந்தவர் அழியவேண்டுமென்ற தன்முனைப்புடன் செயற்படுகிறார்கள். உலகளவில், கொலைசெய்யப்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதமானோர் அவர்களது முன்னாள் அல்லது தற்போதைய துணைவரினாலேயே கொல்லப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. இப்படி நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை அந்தப் பந்தத்தைப் பெண் உடைக்கும்போது அல்லது அவ்வாறு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கும்போதே நிகழ்கின்றன, என்கிறார் Aaron Ben-Zeév Ph.D.

பெண்களின் கொலைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அவை இரண்டு பொதுவான அனுமானங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:

(1) பெண் தன்னுடைய உடைமையென கருதும் ஆணின் மனப்பாங்கு. அதனால் பெண் மீது பாலியல்ரீதியான பொறாமையும் கோபமும் அந்த ஆணுக்கு உருவாகிறது.
(2) பெண்ணின் மீது ஏற்கனவே ஆண் நடாத்திய வன்முறைகளின் உச்சக்கட்டமாக கொலை நிகழ்கிறது

மீண்டும் சேர்தலுக்கான வழி இல்லையென்று உணரும்போது அந்தப் பெண் மீதான ஆணின் கோபமும் பொறாமையும் மிகவும் தீவிரமடைகின்றன, கொலைசெய்யும் திட்டம் உருவாகிறது. தெளிவாகத் திட்டமிட்டே அந்த ஆண்கள் இந்தக் கொலைகளைச் செய்கின்றார்கள். இப்படியான கொலைகளுக்கு முன்பாக அத்தனை பெண்களும் அந்த ஆண்களால் பின் தொடரப்பட்டிருக்கிறார்கள், விரும்பத்தகாத செய்திகளை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தக் கொலைகளை எதிர்பாராத செயல்கள் எனக் கூறமுடியாது. ஆண் கட்டுப்பாட்டை இழப்பதால் அல்லது ஆணின் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் இவை நடக்கின்றன என்றும் கூறமுடியாது. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நன்கு திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. தன்னை அழித்தாலும் பரவாயில்லை மற்றவரை அழிக்கவேண்டுமென்ற மனநிலையையின் உக்கிரமே இங்கு காணப்படுகிறது என்ற ஆய்வை நிரூபிக்கும் ஒரு கொலையாளியின் வாக்குமூலத்தை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.

Continue Reading →