‘பதிவுக’ளில் அன்று: டி.எஸ்.எலியட்: ஓர் அறிமுகம்!

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


– பதிவுகள் – யூலை 2004 இதழ் 55
'பதிவுக'ளில் அன்று: டி.எஸ்.எலியட்: ஓர் அறிமுகம்!1

எழுத்தாளர் பிரம்மராஜன்1910-ம் ஆண்டுக்கும் 1930-க்கும் இடையே நிகழ்ந்த இந்த நூற்றாண்டின் மிகச் சக்திவாய்ந்த இயக்கமான ‘நவீனத்துவ இயக்கத்திற்கு’ எலியட் அளித்த பங்களிப்பு இன்னும் சர்ச்சிக்க முடியாதது. தனது சக அமெரிக்கரான எஸ்ரா பவுண்டுடன் (1885-1975) இணைந்து ஒரு புதிய புத்தம் கவிதை எழுதும் முறையைத் தொடங்கி வைத்தார் எலியட். முதலாம் உலகப்போர் நடந்த பிறகும் இயற்கை பற்றிப் பாடிக் கொண்டிருந்த ஜார்ஜிய ஆங்கிலக் கவிஞர்களின் தேய்ந்து போன, காலாவதியான கவிதை வெளிப்பாட்டு முறையையும், அவர்களின் கவிதைப் பொருள்களையும் எலியட் முற்றாக நிராகரணம் செய்தார். இந்த மாதிரிப் புரட்சிகள் இதே சமயத்தில் பிறகலைகளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. ‘நவீனத்துவ கலைஞர்கள்’, முன்பு ஏற்பட்ட கலை பற்றிய வரையறையை உடைத்தெறிந்தனர். உரைநடையில் James Joyce (1882-1941) என்ற ஐரிஷ் நாவலாசிரியராலும், ஓவியத்தில் பாப்லோ பிக்காசோ (1881-1973) வாலும், இசையில் Igor Stravinsky யாலும் (1882-1971) இத்தகைய புதுமையாக்கல் சாத்தியமானது. பவுண்டின் மிகப் பிரபலமான “Make it New” என்ற கொள்கையை பவுண்டின் சந்திப்புக்கு முன்பிலிருந்தே எலியட் செய்து வந்திருந்தார். ஆனால் இருவரின் சந்திப்புக்குப் பிறகு எலியட்டின் கவிதைகள் மேலும் இறுக்கமடைந்தன. புதிய படிமங்களையும், புதிய லயங்களையும் கவிதையில் வெளிப்படுத்துவதோடன்றி தினசரிப் பேச்சின் மொழியைக் கவிதையில் கையாள வேண்டும் என்றனர் ‘நவீனர்கள்’. மேலும் கவிதை ஒரு கவனச் செறிவை நோக்கமாகக் கொண்டு, தெளிவற்ற பல வரிகளுக்குப் பதிலாய் ஒரே ஒரு கச்சிதமான சொல்லை, படிமத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் நன்மை பயக்கும் என்றனர்.

எலியட்டின் கவிதைகளை முதலில் படிக்கும் வாசகர்கள் சந்திப்பது இரண்டு பிணைந்த அம்சங்கள்: 1. அசாத்தியத்தன்மை, 2. புரியாமை. வோர்ட்ஸ்வொர்த்தைப் படித்த வாசகர்களுக்கு நிச்சயமாக எலியட்டின் கவித்துவ வெளிப்பாட்டு முறையும், கவிதைப்பொருளும் விநோதமாய்த் தெரிவதில் ஆச்சரியமில்லை. கிராமத்து மடையர்களையும், பிச்சைக்காரர்களையும் தனது கவிதையில் இடம்பெறச் செய்த வோர்ட்ஸ்வொர்த் பதினெட்டாம் நூற்றாண்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலக்கிய தராதரங்களுக்கு எதிர்வினை தந்தவர். எலியட்டும் இம்மாதிரியாகவே “நாற்றச் சாக்கடைகள்” மற்றும் “எரிந்துபோன சிகரெட் முனைகள்” பற்றியும் தினசரி மொழியில் கவிதைகள் எழுதியதற்காகக் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர். எலியட்டின் கவிதைகளில் ‘அழகு’ என்கிற அம்சமே இல்லை என்றும் சில விமர்சகர்கள் நிறுவ முயற்சி செய்தனர். மேலும் புரூபிராக் கவிதையில் வரும் இந்த வரிகளுக்கு வாசகன் எந்தமாதிரி எதிர்வினை தரவேண்டும் என்றே புரியாமலிருந்தது:

“நான் மூப்படைகிறேன் . . . நான் மூப்படைகிறேன். . .
என் காற்சட்டைகளின் அடிப்பகுதிகளைச் சுருட்டி அணிவேன்.”

தன் பெரும்பாலான வாழ்நாட்களை பிரிட்டனில் கழித்தபோதும், பிரிட்டிஷ் பிரஜையாக மாறிய போதும் தன்னை ஒரு அமெரிக்கக் கவிஞன் என்று கருதுவதை எலியட் நிறுத்தவில்லை. 1959 ஆம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் எலியட் கூறினார்:

Continue Reading →