‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் பெப்ருவரி 2008 இதழ் 98
(2006, அக்டோபர் 13,14 களில் பாரீஸில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில் வாசித்த கட்டுரை. அ. மங்கையின் தொகுப்பில் , ‘மாற்று’ பதிப்பக வெளியீடாக வெளியான ‘பெயல் மணக்கும் பொழுது’ ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள் நூல் பற்றியது.)
1986ல் வெளிவந்த ‘சொல்லாத சேதிகள்’ வெளிவந்தப் பிறகு தனித்தனியாகவும் கூட்டு முயற்சியாகவும் பல்வேறு தொகுப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. 80களில் ஈழத்தில் தொடங்கிய ஆயுதப்போராட்டம், தமிழ்த் தேசிய இயக்கத்தின் எழுச்சி மாணவியரிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. சில கூட்டு முயற்சிகளும் அமைப்புகளும் தோற்றம் கண்டன. பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப்பறவைகள், நங்கை, இசுலாமிய பெண்கள் மத்தியிலிருந்து வெளிவந்த மருதாணி ..போன்ற பத்திரிகைகள் தான் பெண் எழுத்துகளுக்கு கவிதைகளுக்கு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுத்தன.
பேராசிரியை அ.மங்கை அவர்கள் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து “பெயல் மணக்கும் பொழுது” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பிலிருக்கும் கவிதைகளை முன்வைத்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
யுத்த கால சூழலில் ஆண்களின் பங்களிப்பு பெண்களின் பங்களிப்பை விட அதிகம்தான். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தச் சூழலின் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகமாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகளை விளைவித்தது. அந்த வலியை உணரும் போதுதான் காலம் காலமாய் யுத்தக்களத்தில் பெண்ணும் பெண்ணின் உடலும் எதிரிகளின் வன்மம் தீர்க்கும் ஒரு பொருளாக இருப்பதைத் தலையில் அடிக்கிற மாதிரி உணர்த்தியது.சண்டை நடக்கிறது, வெட்டு, குத்து, ஒருவர் பிணத்தின் மீது ஒருவர் விழுந்து சாகட்டும், ஏன் பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க வேண்டும்? ஆடு, மாடுகளைக் கவர்ந்து செல்லும்போது அந்தப்புரத்து பெண்களையும் எதிரி நாட்டு அரசன் தன் அடிமைப்பெண்களாக சிறை எடுத்துச் சென்றான் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கிறதே.. இந்த இடத்தில் அந்தப்புரத்து பெண்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்றான் என்று பொய்த் தோற்றம் தரும் வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் பெண்களைத் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்து கொள்ளும் பொருட்டு, சிறை எடுத்துச் செல்லப்பட்டதை அறிகிறோம். புராண இதிகாசக் காலம் முதற்கொண்டு போர்க்காலத்தில் பெண் அனுபவிக்கும் வலி அவளே அவளுக்கானதாக அமைந்துவிட்டது. இந்தச் சுழலில் தான் போர்மேகங்கள் சூழ்ந்த ஈழத்து மண்ணில் எழுதப்பட்ட பெண் கவிஞர்களின் எழுத்துகள் தனித்து கவனம் பெறுகின்றன. அவர்களின் பெண்ணியம், அமைதிக்கான கருத்துகள் யாவுமே மேற்கத்திய இசங்களின் தாக்கமின்றி சுயம்புவாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இதாகத் தான் இருக்க முடியும்.