முன்னுரை
காலப் பழமை கொண்ட தொல்காப்பியம் தம் கால இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளது.இதன் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாடு நாகரிகத்தை வடித்துத்தந்தன. அதனால் அவற்றை இலக்கியங்களாகப் பார்ப்பதோடு வரலாற்று ஆவணங்களாகவும் நோக்க வேண்டியுள்ளது. அவ்விலக்கியங்களில் பொருள் மாறாத்தன்மை, அமைப்பு மாறாத்தன்மை ஆகியவை அதன் நிலைத்த தன்மைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவ்வகையில் நோக்கும் போது தொல்காப்பிய இலக்கண அமைப்பிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்கள் இமைந்துள்ளனவா, அதன் துறை பகுப்பு முறை பொருத்தம் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது இன்றைய ஆய்வுலகில் தேவையான ஒன்றாகிறது. அத்தகைய வழியில் தொல்காப்பியரின் துறை பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
துறை
சங்க அகப்புற இலக்கிய மரபாகத் துறை என்ற ஓர் அறிய வகை சுட்டப்படுகின்றது. இத்துறை நாடக மரபிற்கு ஒரு முருகியல் அமைப்பாகும். என்னையெனின் நாடக மாந்தரை அறிமுகப்படுத்தும் வகையில் ஓர் அங்கம், அரங்க நாடகத்தில் உண்டு. அவ்வாறே அகப்பொருள் நாடகத்தைக் காட்சிகளாக எளிய முறையில் தருவது துறை என்னும் செய்யுளுறுப்பாகும். தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளை விளக்கிக் கூறுமளவு அகப்பொருள் துறைகளை விளக்க முற்படவில்லை. ஆனால் கூற்றுக்களை வரை முறைப்படுத்தி விளக்குகின்றார். தொல்காப்பியர் துறையினை,
“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவன் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறந்தானே துறை எனப்படுமே” (தொல்.செய்.நூ.207)
என்கிறார். அதன் பயன் என்ன என்பதை,
“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்” (தொல்.செய்.நூ.208)
மேற்காணும் இவற்றைக் காணும்போது ஒரு பாட்டுள் துறை என்பது அகமாந்தர், புறமாந்தர் போன்றவர்களின் செயல்களும், விலங்கினங்களின் செயல்களும் அவை அல்லாமல் பிற வந்தால் அவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் செயல்களின் அடிப்படையிலும் பொருள் காண வேண்டும். அவ்வாறு கண்டதை அதனதற்கு ஏற்றாற் போல மரபொடு முடிக்கும் வெளிப்பாட்டுத் திறனே துறை என்பதைப் புலப்படுத்துகிறது. இது அந்தப்பாட்டுள் கிடக்கும் பரந்த பொருளையும் உணர்த்தும் தன்மையினையுடையது. பின் அந்தப்பாட்டைப் படிக்க முற்படும் முன் அதன் பொருளெல்லாம் அறிய ஒரு நுழைவாயிலாக அமைந்தது. இது பாடலின் பொருளைப் பிறருக்கு உணர்த்துதல் பொருட்டே அமைக்கப்படும் என்றும் அறியலாம். “துறை வகை என்பது முதலுங் கருவும் பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒரு துறைப்படுத்தற்குரிய கருவி செய்யுட்கு உளதாகச் செய்தல்” என்ற மு.இராகவையங்கார்(தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப.169)விளக்கம் ஒப்புநோக்கற்குரியது. தொல்காப்பியர் கருத்துப்படி நோக்கின் துறை மரபு வழுவாமல் அவற்றிற்குரிய பண்பைச் சுருக்கமாகக் கூறுவது எனலாம்.
Continue Reading →