‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
ஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் ‘பெரும்போக்கு’ மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். பேரறிவாளர்கள் இந்நெகிழ்வை பெண்ணியல்பு எனக்கூடும். பெருநகருக்கேயுரித்தான பைத்தியக்காரப் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கொழும்பில் நுழையும்போது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. தேவைகளின் குரல்களால் ஓயாமல் அழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பம் அற்ற ‘தனியறை நாட்கள்’ என்னளவில் கொண்டாடத்தக்கன. மடிக்கணனி, சில புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கடலோரம் மாலை நடை இவை போதும் தனியறை நிரப்புதற்கு. கனடா கடவுச்சீட்டிற்கு இந்திய விசா தர ஒரு வாரம் வேண்டுமென்றது ஒருவகையில் நல்லதாயிற்று.
இரண்டு நாட்கள் இனிதே கழிந்தபின் உண்டியல்காரர் வடிவில் வந்தது வினை. “இந்த அறையில் தனியே இருக்கிறீர்களா?”புருவங்களை உயர்த்திக் கேட்டார். ஆமென்றேன். “இப்படியான இடங்களில் தனியே இருப்பது பிழை. தேவையற்ற பிரச்சனை வரும்”என்றார். நான் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தவர் ஒருவரின் – ஒரு நட்சத்திர குறியும் அற்ற விடுதியொன்றில். 2001ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு வரும்போதெல்லாம் அதுவே என் தங்ககமாயிருந்தது. விடுதிப் பையன்கள் கோழிப்பார்சல் சொல்லியனுப்பினால் கூடவே பழங்களும் வாங்கிவருவார்கள். அடிக்கடி படுக்கை விரிப்பு மாற்றி, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பெரிய குவளையில் பிரத்தியேகமாகத் தேநீர் தந்து ‘ஆதரவாக’க் கவனித்துக்கொள்வார்கள். அதற்காக நான் சில நூறு ரூபாய்களை உவந்தளித்திருந்தேன் எனச் சொல்ல வேண்டியதில்லை. உண்டியல்காரர் போனபிறகு பயம் ஒரு குளவியைப் போல அறையினுள் சொய்யிட்டுக்கொண்டிருந்தது. அதற்குத் துணையாக அறையின் வசதிக்குறைவு தன்னைப் புதுப்பித்துக்கொண்டு கண்ணெதிரில் நின்றது. மேலும், அந்தத் தெருமுனையில் நிற்குமொரு ஆட்டோக்காரன் என்னை ஏற்றிக்கொண்டு போனபோது தனது சகாவை அவசரமாக வரும்படி அழைத்திருந்தான். நான் கைப்பையை இறுக்கிக்கொண்டு ஆட்டோவை சடுதியாக நிறுத்தி போகுமிடத்திற்கு முன்னதாகவே இறங்கிவிட்டேன். ஒன்றைச் செய்ய முடிவெடுத்துவிட்டால், அதனை வழிமொழியும் காரணங்களைக் கற்பித்துக்கொள்வதொன்றும் சிரமமில்லை.மறுநாள் காலை நான்கு நட்சத்திர விடுதியொன்றின் ஆளை அமிழ்த்தும் கட்டிலின் மென்மையை வியந்தபடி படுத்திருந்தேன். நேர்த்தியாக தரை ஓடு பதிக்கப்பட்டிருந்த விசாலமான குளியலறைப் பீங்கான் மீதமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதற்கான ஒருநாள் கட்டணம் 6,800ரூபாய்கள். குற்றவுணர்வைத் தூண்டும் தொகைதான். எனினும், ‘உயிருக்கு விலையில்லை’ என்ற மகாதத்துவத்தின் முன் யாதொன்றும் செய்வதற்கில்லை.
இப்போது பிரச்சனைப் பூதம் இல்லாத யன்னலிலிருந்து கிளம்பியது. நான் இருந்த 308இலக்க அறையிலிருந்து அலையெறியும் கடலைப் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் தெருவைக்கூடப் பார்க்க முடியாது. எஞ்சியிருந்த இடத்தை என்ன செய்வதென்றறியாமல் கட்டிய அறைபோலிருந்தது அது. என் வயிற்றெரிச்சலைக் கிண்டுவதற்கென்றே ஏப்ரலிலும் அதிசயமாக மழை வேறு பெய்துகொண்டிருந்தது. அறையை மாற்றித் தரும்படி கேட்டேன். விடுதி நிறைந்திருப்பதால் இல்லையென்றார்கள். யன்னலற்ற அறையொன்றினுள் குருட்டு வெளவாலைப்போலமுட்டிமோதிக்கொண்டிருப்பது ‘வாராமல் வந்த மாமணியாகிய’ஓய்விற்கு இழைக்கும் துரோகமெனப்பட்டது.