‘பதிவுகளின் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் தை 2009 இதழ் 109
அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே.
அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.
சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.
‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!