இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்’ என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தியினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்குப் பதிவுகள் இணைய இதழும் இணைந்து தன் பங்களிப்பை நல்க வேண்டி முனைவர் வே.மணிகண்டன் அவர்கள் தொடர்புகொண்டபோது மகிழ்வுடன் இணங்கினேன். முனைவர் வே.மணிகண்டன் வழி நடத்திலில் ஏற்கனவே இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு எனது படைப்புகள் மற்றும் பதிவுகள் இணைய இதழ் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்களின் ஆரோக்கியமான பங்களிப்பை நன்கு பயன்படுத்தும் முனைவர் வே.மணிகண்டனின் முயற்சியால் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே சமயம் 2000ஆம் ஆண்டிலிருந்து , ‘அனைவருடனும் அறிவைப் பகிர்ந்துகொள்வோம்’ என்னும் தாரக மந்திரத்துடன் செயற்பட்டு வரும் ‘பதிவுகள்’ இணைய இதழின் இதுவரை காலப்பங்களிப்பையிட்டு எனக்கு மனத்திருப்தி நிறையவே உண்டு.
இணையத்தில் தமிழின் பாவனையை எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிப்பதையும், என் படைப்புகளை வாசகர்கள், எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையே முக்கிய நோக்கங்கங்களாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘பதிவுகள்’ இணைய இதழை வாசகர்கள், எழுத்தாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியமான இணைய இதழ்களிலொன்றாக மாற்றி விட்டது. அத்துடன் தமிழகப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்பு ‘பதிவுகள்’ இணைய இதழினை இன்று முக்கியமான பன்னாட்டு இணைய ஆய்விதழாகவும் மாற்றியுள்ளது.
தமிழிலக்கிய ஆய்வுகளுக்குப் ‘பதிவுகள்’ இணைய இதழ் களமமைத்துக் கொடுத்து வருவதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். அதே சமயம் ‘பதிவுக’ளின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா), பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு), பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) மற்றும் எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) ஆகியோர் பதிவுகளுக்கு ஆலோசகர்களாகவிருந்து ஆற்றும் பங்களிப்பும் விதந்தோதப்பட வேண்டியது. ஆரம்பத்தில் ஆலோசகர்களிலொருவராக விளங்கியவரும், பதிவுகள் இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) அவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.
தெப்பக் குளத்தின் தென்புறத்தில்,
திண்டில் அரச மரநிழலில்,
செப்பற் கடங்கா அருள்சுரக்கும்,
சிவனார் உமையாள் முதற்குமரர்,
தொப்பை வயிற்றார் : துதிக்கை யார்,
தூங்கா மல்தினம் கண்விழித்து,
குப்பைக் குணத்தார் செயல்கண்டு,
குமுறு கின்றார் குழம்புகின்றார் !
“ஆற்றங் கரையோ குளக்கரையோ,
அதிலோர் அரச மரநிழலோ,
ஏற்றம் பெறவே இனிதுநின் றால்,
என்னை ஏனதில் இருத்துகின்றார்?
வேற்று மதத்தார் கோவிலெல்லாம்,
விண்புகழ் சேர்க்கும் மேன்மைபெற,
நாற்றம் பிடித்த இடத்திலெல்லாம்,
நமையேன் வைத்து நசிக்கின்றார் ?
காலைப் பொழுதில் அபிஷேகம் : பின்,
கடமைக் கெனவொரு சிறுபூஜை !
மாலைப் பொழுதிலும் இதுதொடரும்,
மதிப்பாய் தினமும் இருவேளை !
வேலை என்று இதைத்தொடர்ந்து,
வெறுப்பை உளத்தில் ஏற்றுகின்றார் !
நாலு தலையார் நம்மாமர்,
நமக்கென ஏனிதை எழுதிவைத்தார் ?
முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மறைந்த புத்த துறவியின் உடலைத்தகனம் செய்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் சூழலைச் சிதைக்கும் ஒரு நிகழ்வு. எழுபதுகளில், எண்பதுகளில் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் சட்டங்கள் தம்மைப் பாதுகாக்கவில்லை. பாரபட்சத்துடன் தம்மை அணுகுகின்றன என்று எண்ணினார்கள். இனக்கலவரங்கள், ஆயுதப்படைகளின் அடக்குமுறைகள் அவர்களை ஆயுதமேந்த வைத்தன. விளைவு நீண்ட யுத்தம். இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பத்தைக் கடந்த நிலையில் தமிழ்ப்பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்த புத்த மதத்துறவிகள் நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் இறந்த புத்த பிக்குவின் உடலைத்தகனம் செய்திருக்கின்றார்கள். காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடந்தவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறையினர் உட்பட. இலங்கையின் சட்டமானது அனைவரையும் பாரபட்சமில்லாமல் நடத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
நடந்தவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் இன்றுள்ள இளம் சமுதாயம் மீண்டும் போராடத்தொடங்கும் சூழல் உருவாகும். அடுத்தமுறை இனவெறிபிடித்த புத்தபிக்குகள் இவ்விதம் தமிழ்ப்பகுதிகளில் வெறியாட்டம் ஆடுகையில் அவர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகலாம். பதிலுக்கு அவர்களுக்கு ஆதரவாகப் படையினர் தமிழர்களைத் தாக்கலாம். தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் தொடங்கலாம். மீண்டுமொருமுறை இலங்கை போர்ச்சூழலுக்குள் தள்ளப்படலாம். இவ்விதமான சூழலுக்குள் நாடு மீண்டும் தள்ளப்படும் சூழலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அனைவரும் உணர வேண்டும். இவ்விதமான அபாயச் சூழல் ஏற்படாமலிருக்க நடந்தவற்றுக்கு இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இனவாதம் பேசிச் செயற்படும் புத்தமதத்துறவிகள் புத்த மதத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். புத்தரின் கோட்பாடுகளுக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். இவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தடைபடுகின்றது. இலங்கையின் அனைத்தின மக்களும் , இன, மத, மொழி பேதமின்றி நடந்த சட்ட மீறலைக் கண்டிக்க வேண்டும். அதற்கு நீதி கிடைக்கப்போராட வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள் ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது. அவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான் அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றினார்கள். இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தெரிந்துகொண்டார்கள். அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான் இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.
ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச். எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.
ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை கமாலின் இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின் பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.
1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும் வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன. அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும் சிலர் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை புற்றீசல்போன்று பரவியது. இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும் வந்தன. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது. தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில் சிறகடித்துப்பறந்தனர். புதுக்கவிதைகளுக்காகவும் சிற்றேடுகள் மலர்ந்தன. மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர். இலங்கையில் அவ்வேளையில் எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம் என்றுசொல்வதுதான் பொருத்தம். சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.
அக்டோபர் 5 அன்று ‘டொராண்டோ’வில் வெளியிடப்படவுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் ஐந்து நூல்களிலொன்று ‘நவீன இலக்கியம்: ஈழம் – புகலிடம் – தமிழகம்”. பூபாலசிங்கம் (இலங்கை) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நூல். தேவகாந்தனின் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பேசும் விடயங்களாக தமிழ்க்கவிதைகளின் செல்நெறி, இலங்கைத்தமிழ்க் கவிதைகள் பற்றிய வரலாற்றுப் பார்வை, இலங்கைத்தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனப் பார்வை, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் நா.பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் , தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நோக்கு, புலம் பெயர் இலக்கியம், மலேசிய இலக்கியம், பின் காலனித்துவ இலக்கியம், கனடா இலக்கியச் சஞ்சிகைகள் இவற்றுடன் மு.தளையசிங்கத்தின் படைப்புகள் ஆகியன அமைந்துள்ளன. கட்டுரைகள் 1998 -2018 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
தேவகாந்தன் அவர்கள் முகத்துக்காக எழுதுபவரல்லர். தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். இங்குள்ள கட்டுரைகளில் அவரது இவ்வாளுமையினைக் காணலாம். அவரது சிந்தனை வீச்சினைக் காணலாம். ஒருவரது படைப்புகளை வாசித்துச் சிந்தித்து அவர் எடுக்கும் முடிவுகளிலிரிந்து இதனை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மு.தளையசிங்கத்தின் படைப்புகளிலிருந்து அவர் எடுக்கும் பின்வரும் முடிவினைக் கூறலாம்:
“சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும் , இச்சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக்கொண்டு. அப்படியில்லை என்று வாதிடுவதெல்லாம் வீண்.” (பக்கம் 118; கட்டுரை ‘படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை’.)
தொகுப்பின் கட்டுரைகள் கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் எனப் படைப்பாளிகள் பலரை அவர்கள் தம் எழுத்துகளை, சஞ்சிகைகள், இணைய இதழ்களை அறிமுகப்படுத்துவதுடன் தேவகாந்தனின் கருத்துகளையும் கூடவே வெளிப்படுத்துகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள் பற்றிக் குறுப்பிடுகையில் “இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிக விஸ்தீரணமானது. அதுமனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்சினைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை, நம்பிக்கைகளை, பெண்ணிய எழுச்சிகளை, ஜனநாயக அறை கூவல்களைப் பேசுகின்றது. சில கவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சில கவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில் பொருளாதாரத்தளத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமை பற்றியும் , சில உலகப் பொதுப் பிரச்சினைகளான விபசாரம், எயிட்ஸ் நோய் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்து ஒரு பொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களுமுண்டு. இத்தனிப்பண்புகள் கவிதைத்தரத்தை நிர்ணயிக்க, பொதுப்பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன.” (பக்கம் 1 & 2; கட்டுரை 1: ‘சமகால தமிழ்க்கவிதைகளின் செல்நெறி குறித்து….) என்று அவர் கூறுவது ஓருதாரணம்.