எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புக்களும் வேண்டாம். பொறு ஒரு கதை எழதி ரைப் செய்து கொண்டிருக்கிறன். விரைவில் அனுப்பி விடுவேன். அதைப்பார். அதைப்பார்த்திட்டு என்ன மாதிரி எண்டு சொல்லு. கவிதைகள் எழுதுவது நல்லாயிருக்கு ஆனால் சிறுகதை… அந்தரப்படாதை நல்லா வாசி நல்ல புத்தகங்களை வாசி. சும்மா வாசிக்கிறதில்லை. நல்லாக உள்வாங்கிää அதுக்குள்ள போய்த்திளைத்துää ரசித்து வாசிக்கவேண்டும். இவைகள் அவனின் அறிவுரை.
நல்ல காலம் இவர் ஆசிரியத்தொழில் பார்க்கவில்லை. நறுக்காக நேருக்குநேர் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி மாணவர்களை வழிநடத்தினால் மனமுறிந்து தொடர்ந்து கல்வி கற்பதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில்தான் பார்த்திருப்பார்கள்.
ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான அறிவும்ää அனுபவத் திரட்டுக்களும்ää கற்பிக்கும் பாடத்தில் பூரண தீர்க்கமான சிந்தனையும் நிறைந்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தாள். மாணவர்களின் மனது பாதிக்காவண்ணம் கல்வியைப்; புகட்டுவதில் கையாளும் பல்வேறு முறைகளை பரீட்சித்த காலங்கள் அவள் கண்முன் கரைபுரண்டு ஓடிவிட்டன.
நேருக்கு நேர் சுட்டிக் காட்டும்போது மனதிருத்தித் திருந்தும் பக்குவமும் பெற்றிருந்தாள்.
எவ்வளவு நல்ல குணம் அவனுக்கு. மறைவின்றிக் கூறுவது. நேருக்கு நேரே ஆளைத்தெரியாத போதே அவனின் எழுத்தில் ஒரு கவர்ச்சி. வீட்டிற்கு வந்த ஒரு கடிதம் தான். ஆனால் அவளின் பெயர் குறிப்பிட்டும் வரவில்லை. சம்பிரதாயத்திற்குச் சரி. பரவாயில்லை. அவள் அந்தக் கடிதத்தினைப் பத்திரப்படுத்தி ‘பைலில்’ இன்னும் வைத்திருக்கிறாள். கடிதத்தில் எழுதிய விடயங்கள் அல்ல அதனை எழுதிய முறை. கடிதம் எழுதுவதற்கும் கலை வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
ஆருக்குத் தெரியும்? இலங்கையில் எங்கெங்கோ இருந்த நாங்கள் பிரான்ஸ்ää இங்கிலாந்து என்று வந்து வாழ்வோம் என்றுää அதுவும் அவனும் இங்கிலாந்துக்கு வந்து எங்கட வீட்டுக்கு வருவான் என்று.
அவனின் சிறுகதையும் வந்தது. அவள் இழைத்துää ரசித்து வாசித்து அதில் அவனைக் கண்டாள்.
அவனோடு பழகும்போது இப்படித்தான் இருப்பான் எனக் கற்பனை செய்தாளோ அப்படியேதான் இருக்கிறான். மாற்றமில்லை. சிரிää சிரி என்று தனக்குள் சிரித்துக்கொண்டாள். கதை நல்லம். அனுபவத் திரட்டுக்கள் செறிந்து இருந்தது. கடந்த காலம்ää நிகழ்காலம்ää எதிர்காலத்திற்கு அறிவுரை கூட இருந்தன. இதுதான் சமூகமாற்றத்துக்கான இலக்கியம். எந்த ஒரு இலக்கியமும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டியது என்றால் அந்தப் படைப்பாளிக்கு வெற்றி என்று அவளின் அப்பா அடிக்கடி கூறுவார்.
கதையை வாசித்து முடிந்ததும் அளவில்லாத சந்தோஷம் அவளுக்கு. தான் சிறுகதை எழுதியது மாதிரி. அவனோடு கனக்க கதைக்க வேண்டும்போல இருக்கு. அது எப்படி? கருத்துக்கள் கட்டாயம் பரிமாற வேண்டும். அவனோடு கதைத்தால் கனக்க விடயங்களை அறியலாம். அறிவை வளர்க்கலாம். மனிதர்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். ‘உம்’ என்று சும்மா இருக்கக்கூடாது. மனிதர்களின் தேடலின் வெற்றியே இன்றைய உலகின் நவீன வாழ்க்கை.