தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான ‘பதிவுக’ளும் இணைந்து நடத்திய ‘தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்’ என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் இதழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.