புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ படைப்பினைக் கூறுவேன்.
ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும்.
முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது ‘அமெரிக்கா’ , ‘குடிவரவாளன்’ ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் ‘அசோகனின் வைத்தியசாலை’யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.
லெனின் சின்னத்தம்பி பணிபுரியும் உணவகத்தின் முதலாளி சப்கோஸ்கி, அவனது மனைவி, அவனுக்குக்கீழ் தொழிலாளிகளைக் கண்காணித்து வேலை வாங்கும் இடைநிலைத்தொழிலாளர்களான சண்டைக்காரன் (திருவாளர் ஸ்ரைற்ரர்) , அக்சல் குறுப்ப இவர்களை மையமாக வைத்து. உணவகம் திவாலாகப் போகும்வரையிலான நிலையினை விபரிப்பதுதான் இந்த நாவலின் முக்கிய நோக்கம்.
எழுத்தாளர் ஜீவமுரளி திறமையான கதைசொல்லிகளிலொருவர் என்பதற்கு நல்லதோர் அத்தாட்சி ‘லெனின் சின்னத்தம்பி’.
‘கெவ்ரர் பார்ட்டி சேவீஸ்’ என்ற உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவி வயிறு வளர்க்கும் கோப்பை கழுவுமொரு தொழிலாளியான ‘லெனின் சின்னத்தம்பி’யின் வாழ்வினை அவர் வேலை பார்க்கும் உணவகம் ‘திவாலா’கப் போகும் வரையில் விபரிக்கும் நாவல் அவரது வேலை அனுபவங்களை, அவருடன் வேலை பார்க்கும் சக மனிதர்களின் உளவியலை, நிறுவனத்தின் வர்த்தக நிலையினை, அது எதிர்நோக்கும் சவால்களை, அது பணி புரியும் தொழிலாளர்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சுவையாக, சிறப்பான மொழி நடையில் வெளிப்படுத்துகின்றது.