– அண்மையில் ஓவியர் கெளசிகனுடன் மின்னஞ்சல் மூலம் நடைபெற்ற நேர்காணலிது. – பதிவுகள் –
ஓவியர் கெளசிகன் தன்னைப்பற்றி……..
1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 திகதி பதுளையில் பிறந்தேன். கொழும்பு கொட்டாஞ்சேனையில் U.C. மெதடிஸ்ட் கல்லூரியில் G.C.E. O/L வரை கல்விகற்றேன். 1980 களில் சிந்தாமணி பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். அதன்பின்னர், 1990 களில் தினகரனில் பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். 1994 முதல் தொழில்முறை ஓவிய ஆசிரியராகவும், 1998 முதல் ஒரு தொழில்முறை கணினி வரைகலைஞராகுவும், இணையத்தள பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறேன். 2003 இலிருந்து தொடர்ச்சியாக 11 ஓவியக்கண்காட்சிகளை எனது மாணவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தியுள்ளேன். 2018 இல் முதன் முதலாக இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள சாந்திநிகேதனில் எனது கண்காட்சி ஒன்று அரங்கேறியது. இலங்கையிலிருந்து சாந்திநிகேதன் சென்று ஓவிய கண்காட்சி ஒன்றை நடாத்திய முதல் இலங்கையர் என்பதில் பெருமிதம். சென்ற மாதம் தமிழ் இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலைஞர்களுக்கான 2019 மாநில விருது வழங்கும் விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றால் “கலைச்சுடர்” என்ற பட்டத்தை கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது.
கேள்வி: உங்களுக்கு ஓவியத்துறை மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? ஏன்?