சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.
சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும் கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.
இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..
சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.