இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.
தனது ஏழு வயதில் தந்தையைப் பறிகொடுத்த எல்லாளனுக்கு எல்லாமே அம்மாதான். சொந்தக்காலில் நிற்பதற்கு இளமையிலேயே கற்றுக் கொடுக்கின்றார் அம்மா. சிறுவயதில் தேவாலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்த எல்லாளன் ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) நடத்திய அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்கின்றார். 83ஆம் ஆண்டு இனக்கலவரம் பலரை அகதிகளாக்கி ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர்களுள் மதகுருமாரும் அடக்கம். அப்படியே இவர்களது கோப்பாய் தேவாலயத்திற்கும் ஒரு மதகுரு வருகின்றார். அப்போதுகூட வடபகுதிகளில் இருந்து பேக்கரி போன்றவற்றை நடத்திவந்த சிங்களவர், அவர்களது உடைமைகள் எதுவும் தாக்கப்படவில்லை. 84 ஆம் ஆண்டு, இராணுவத்தின் வற்புறுத்தலின் பின்னர்தான் அவர்கள் வடபகுதியை விட்டுச் சென்றார்கள். 84 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வடபகுதி வந்த சிங்கள பிஷப், இவர்களின் தேவாலயத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடி கட்டி அவரை வரவேற்கின்றார் எல்லாளன். பட்டயக்கணக்காளர் படிப்பை ஆரம்பித்த இவரை 83 இனக்கலவரம் திசை திருப்புகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைகின்றார். இந்தியா செல்கின்றார். `சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது’ என்கின்றார் எல்லாளன். மறு வருடமே அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். அந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த தனது அனுபவத்தை `சரிநிகர்’ பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடராக எழுதினார். பின்னர் திருத்தங்கள் செய்து `தமிழரங்கம்’ இணையத்தளத்தில் வெளியிட்டார். அதுவே பின்னர் இந்த நூலாக வந்திருக்கின்றது.