பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31
1 தவிப்பு – – டானியல் ஜீவா –
என்னெண்டு தெரியல நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற மசிலி இறிகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ… கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காரி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் ரியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு…. உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊரில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்…சீ… அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இஇருக்குது என்று என் மனம் சொல்லியது.
தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.
”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்¡£ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.