“ தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனதில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலா நோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் “ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். நாகேஷ், தமிழ்நாடு,தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி பிறந்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மறைந்தார்.
ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப் போன்று தமிழ்த்திரையுலகில் தனது ஒடிசலான தேகத்தையும் அம்மைத்தழும்புகள் ஆக்கிரமித்த முகத்தையும் வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக உடலை வளைத்தும் நெளித்தும் கருத்தாழமிக்க வசனங்களை உதிர்த்தும் தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்கள் , கமல்ஹாஸன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரேதமாகவும் நடித்தவர்.
குண்டுராவ் என்ற இயற்பெயரைக்கொண்ட நாகேஷ், நடித்த முதல் திரைப்படம் தாமரைக்குளம். ஆரம்பத்தில் மேடைநாடகங்களில் நடித்தும் திருமண வைபவங்களில் நகைச்சுவைநிகழ்ச்சிகளை நடத்தியும் வாழ்க்கையைச்சிரமப்பட்டு ஓட்டிய நாகேஷை தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாற்றிய பெருமை பாலச்சந்தர் மற்றும் ஜெயகாந்தனையே சாரும். பாலச்சந்தரின் நீர்க்குமிழி, எதிர்நீச்சல், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்பன அவரது குணச்சித்திர நடிப்புக்குச்சிறந்த சான்று. ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மற்றும் சர்வர் சுந்தரம் உட்பட பல நூறு படங்கள் நாகேஷின் தனித்துவமான நடிப்பாற்றலுக்கு சான்று பகர்பவை.