வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

கண்ணம்மா!
நேற்று -இன்று – நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
‘அறிவுணர்’வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று – இன்று – நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
‘அறிவுணர்’வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் ‘அறிவுணர்’வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?

Continue Reading →

வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (6) : ஆசிரியரும் மாணவனும்

வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (6) : ஆசிரியரும் மாணவனும்– இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட ‘கலையரசி’ மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-


யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்.”மாஸ்ட்டர், மாஸ்ட்டர்” என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு.”படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்” என்று கதைப்பார்கள்.’வர மாட்டேன், வர மாட்டேன்’ என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.

ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு…பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. ‘திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்’ போடுமந்த மழையிருக்கிறதே…’வெட்டியிடிக்கும் மின்னலும்’ ‘கொட்டியிடிக்கும் மேகமும்’ ‘விண்ணைக் குடையும் காற்றும்’…வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. ‘திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்’ வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.

Continue Reading →

சீனநாட்டு மக்கள் விரைவாகக் குணமடைந்திட வாழ்த்துகள்.

‘யாரும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் ‘கொரோனா’ வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக’ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.

ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.

Continue Reading →