அஞ்சலி: கலைவளன்’ சிசு நாகேந்திரன் மறைந்தார்! பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்!

அஞ்சலி:  கலைவளன்'  சிசு நாகேந்திரன் மறைந்தார்! பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்!தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும்  நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன். நீண்டகாலம்  அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர்.   ஒரு சில வருடங்களுக்கு முன்னர்  அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும்  அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தது.  யாழ். நல்லூர்    இவரது  பூர்வீகம்  எனச்சொல்லப்பட்டாலும்,  பிறந்தது கேகாலையில்  1921 ஆம்  ஆண்டில்.   இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.

அந்நாளைய  அரிவரி  தொடக்கம்  லண்டன் மற்றிக்குலேஷன்    வரையில்  யாழ்.  பரமேஸ்வரா       கல்லூரியில் ( இன்றைய யாழ்.  பல்கலைக்கழகம்)   படித்த  நாகேந்திரன்,   பின்னர்  யாழ். மத்திய  கல்லூரியில்  வர்த்தக  முகாமைத்துவம்  கற்று, London Chamber of Commerce  உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார். 1944   இல்  மன்னார்  அரசாங்க  அதிபராக  கடமையாற்றிய சிற்றம்பலம்  அவர்களிடம்  தட்டச்சாளராக  பணியாற்றும்  அரச நியமனம்   கிடைத்தது.   பின்னர்  கொழும்பில்  அரச  திணைக்களம் ஒன்றில்    பணிபுரியும்போது  கணக்காய்வாளராக  பதவி  உயர்வு பெற்றார்.    அதனைத்தொடர்ந்து,  1979  இல்   சேவையிலிருந்து ஓய்வுபெறும்   வரையில்    பல்வேறு  திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு    பிள்ளைகளின்  தந்தை.  ஒரு  சாதாரண எழுதுவினைஞருக்குரிய  ஊதியம்.   எளிமையான  வாழ்க்கை. இவற்றுக்கு   மத்தியில்  பிள்ளைகளை  படிக்கவைத்து  நல்ல நிலைமைக்கு    அவர்களை   உயர்த்தியவர். தனது வாழ்வை தமிழ் சமூகத்திற்கு  பலவழிகளிலும்  பயன்படும்விதமாக    அமைத்துக்கொண்டிருந்ததுதான்   அவரது  தனிச்சிறப்பு.    அத்துடன்  மற்றவர்களுக்கு  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இளமைக்காலத்தில்  படிப்பில்  படு  சுட்டி  எனப்பெயரெடுத்த  இவர், மாணவர்    தலைவராகவும்  பல்துறை  விளையாட்டு  வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.   உதைபந்தாட்டம்,    கரப்பந்தாட்டம்,  டெனிஸ், டேபிள்   டெனிஸ்  முதலானவற்றிலும்  வல்லவராகியிருக்கிறார். அயராது    இயங்கிய   இவரது  சூட்சுமும்  இந்தப்பின்னணிகள்தான் என்பது    எமக்குப்புரிகிறது.

Continue Reading →