வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘பனையும் பனியும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் ‘ஒரு மாட்டுப்பிரச்சினை’ என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் ‘தமிழ் டைம்ஸ்’ ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ]


ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். ‘இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்’. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த ‘டிரபிக்’ தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான். பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். ஸ்டியரிங்கில் மெல்லியதொரு உதறல் நேற்றிலிருந்து. அதனைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். ‘நேரங் கெட்ட நேரத்திலை இதென்ன டிரபிக் புளக்..’ இவ்விதம் எண்ணியபடி டிரபிக் தடைப்பட்டதற்குக் காரணம் என்னவாகயிருக்குமென் எதிரே நோக்கினான்.

Continue Reading →