இதுவரை உலகில் நடைபெற்ற மரண ஊர்வலங்களில் மிகப்பெரியது கின்னஸ் உலக சாதனைக்குறிப்பின்படி அறிஞர் அண்ணாவின் மரண ஊர்வலம்தான். சுமார் 15 மில்லியன் மக்கள் (ஒன்றரைக்கோடி மக்கள்) கலந்துகொண்ட மரண ஊர்வலம் அது. (ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-magazine-monitor-25310508)
. உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.
சினிமாவைப்பொறுத்தவரையில் பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தை வசனத்துக்கு மாற்றியவர்கள் திமுகவினர் என்று கூறலாம். திரைப்படங்களில் சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளை மையமாக வைத்துக் கதைகளைப் பின்னினார்கள். அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் திரைப்படங்களாக அவரது நாடகங்கள், நாவல்கள் வெளிவந்தன. உதாரணத்துக்கு ‘ஓர் இரவு ‘ நாடகம் திரைப்படமாகியதையும், ‘ரங்கோன் ராதா’ நாவல் திரைப்படமாகியதையும் குறிப்பிடலாம். ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ‘ரங்கோன் ராதா’ போன்ற அறிஞர் அண்ணாவின் திரைப்படங்கள் அவரது திரையுலகப்பங்களிப்பைப்பொறுத்தவரையில் முக்கியமானவை.
venkat_swaminathan_new_a
Copyright © 2024 இரவி — Primer WordPress theme by GoDaddy