சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள் ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள் நிகழும். பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத் தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும். சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில், தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில் இன்ன பிற காட்சிகளில் கிடைக்கும் சித்திரம் மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.
இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை, நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன். ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும் அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான ஐ. சாந்தன். சாந்தனுக்கு கோரியை அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.