– எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அறிஞர் அ.ந.க.வின் ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்னுமிக் கட்டுரை ஏற்கனவே ‘தேசாபிமானி’, ‘நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு இக் கட்டுரை அ,ந,கந்தசாமியின் ஆளுமையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. அவரது இலக்கியக்கோட்பாடுகளினூடு அவரது எழுத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவரது ஆரம்ப காலக் கவிதையான ‘சிந்தனையும் மின்னொளியும்’ எனக்கு மிகவும் அவரது கவிதைகளிலொன்று. தமிழில் வெளியான சிறந்த மழைக் கவிதைகளிலிலொன்றும் கூட. அக்கவிதையில் வரும் “என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்” என்னும் வரிகள் இக்கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளென்பேன். .அக்கவிதையை முழுமையாகக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். – வ.ந.கி –
அ.ந.க பற்றிய மேலதிக விபரங்களுக்கு:
1. கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! – வ.ந.கிரிதரன் – வாசிக்க
2. அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை – வ.ந.கிரிதரன் (இலக்கியபூக்கள் தொகுப்பு ஒன்று நூலில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் முல்லை அமுதன் வெளியிட்ட நூலிது.) -வாசிக்க –
3. நூலகம் தளத்தில் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்) ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு
4. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மின்னூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
5. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல் மின்னூலையும் நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
6. ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ -அந்தனி ஜீவா – வாசிக்க
7. (சிறுகதைகள்.காம்) அ.ந.கந்தசாமி சிறுகதைகள் சில – வாசிக்க
8. அ.ந.கந்தசாமி பக்கம் (பதிவுகள்.காம்) – வாசிக்க
நான் ஏன் எழுதுகின்றேன்? – அ.ந.கந்தசாமி –
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். “சிந்தனையும் மின்னொளியும்” என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய ‘ஈழகேசரி’யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.