ஆனந்த விகடன் சஞ்சிகை தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவரும் முக்கியமான வெகுசன இதழ்களிலொன்று. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதுபவர்கள் விகடன் போன்ற வெகுசன இதழ்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுவதில்லை. முனைவர்கள் தொடக்கம் சிறு சஞ்சிகை ஆசிரியர்கள் வரைக்கும் இப்போக்கினைக் காணலாம். வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசகர்களின் உணர்வுகளுக்குத்தீனி போட்டு, பணம் சம்பாதிப்பதையே பிரதானமாகக்கொண்டு செயற்படுபவை. அதனால் அவற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்துமே ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழ் வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் குறை நிறைகளுடன் அவற்றின் பங்களிப்பு அணுகப்பட வேண்டியவை. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. ஆனால் அதனை நம் விமர்சகப்பெருந்தகைகளோ, சிறு சஞ்சிகை ஆசிரியர்களோ செய்வதில்லை. இவர்களது எழுத்துகளில் எங்குமே இச்சஞ்சிகைகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பு பற்றியோ, இச்சஞ்சிகைகளில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் பற்றியோ தகவல்களோ, கட்டுரைகளோ வெளிவருவதில்லை.
அதே சமயம் இவ்வகையான பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தால் பலரைச் சென்றடையும் சூழல் உண்டு. இதனாலோ என்னவோ இவ்வகையான ஊடகங்கள் வழங்கும் விருதுகளுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். உதாரணத்துக்கு விகடன் விருதுகள் பற்றிக் குறிப்பிடலாம். விகடன் விருது கொடுத்தால் விகடனின் ஆக்கபூர்வமான இலக்கியப்பங்களிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள் எல்லாரும் , விகடன் விருது பெற்ற செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முகநூலில், வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்திக் களிப்படைகின்றார்கள். காரணம் விகடன் விருது அவர்களது பெயர்களை இலட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றதல்லவா?
இவர்கள் செய்நன்றிக்கடனாக ஒன்று செய்யலாம். விகடன் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் இலக்கியத்தரம் மிக்க படைப்புகளை, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப்பற்றியாவது அவ்வப்போது தம் எழுத்துகளில் வெளிப்படுத்தலாம். செய்வார்களா?