பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.