[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது ‘பதிவுகளி’ல் பதிவு செய்வது ‘பதிவுகள்’ வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது ‘பதிவுகளில்’ மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட ‘அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் ‘எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது’ நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]