நினைவுகளின் சுவட்டில் … (96)
எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து….” என்று எதற்கெடுத்தாலும் கோஷமிட்டு தன் தாய் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும், தம் பெருமையையும் இரைச்சலிட்டுச் சொல்லும் அந்த கோஷத்திலேயே எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்கும் ஒரு இயக்கம் முளை விட்டு இன்று ஒரு பலத்த சக்தியாக விளங்கும் நிலையில் தமிழும் தமிழ் நாடும் எந்த நிலையில் இருக்கிறது எனபது நமக்குத் தெரியும். ஒரு கலாசார வறுமை. சிந்தனை வறுமை. இதை நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் இன்றும் கூட அந்த கோஷங்களைக் கற்காத ஒடிஷாவில் பழ்ம் குடிகள் வசிக்கும் பிராந்தியத்தில் ஒரு முகாமில், பல பிராந்தியக் காரர்களும், பல மொழி பேசுபவர்களும் ஒரு சில வருட பிழைப்பிற்காகக் குழுமியுள்ள அந்த முகாமில், கலை என்றும், இலக்கியம் என்றும் சிந்தனை உலகம் என்றும் என்ன சாத்தியம்? ஆனால் ஆச்சரியப் படும் வகையில் கலை, இலக்கியம், சினிமா பற்றியெல்லாம் எனது ஆரம்பப் பாடங்களைக் கற்றதும், அவற்றில் அன்றைய சிகரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது, பின் என் வாழ்க்கை முழுதுமான தேடலின் பாதையை நிர்ணயித்ததும் அந்த முகாமில் கழித்த ஆறு வருடங்களில் தான்.