19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!
“உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் “நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.