ஜெயமோகனின் ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் அண்மைய பதிப்பினை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதில் மூன்றாவது அத்தியாயமான ‘இலக்கியத்தை எதிர்கொள்ள’லின் இறுதியில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்: “இலக்கியம் கருத்தைச் சொல்வது என்று எண்ணும் வாசகர்கள் செய்யும் தவறு என்ன? எளிமையாகக் கூறப்போனால் அவர்கள் இலக்கியத்தை அறிவுத் துறைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்கள். பல சமயம் தத்துவம், ஒழுக்கவியல், மதம், அரசியல் முதலிய பிற துறைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய ஓர் உப- அறிவுத்துறையாகக் கருதுகின்றார்கள். இது பெரும் பிழை. இலக்கியம் என்பது ஒரு கலை.” ஜெயமோகனின் இக்கூற்றினை வாசித்தபொழுது என் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் இலக்கியம் பற்றிச் சிறகடித்துப் பறந்தன. இலக்கியத்தை வெறும் கலையாகக் கருதும் ஜெயமோகன் இலக்கியத்தைத் தனியாகப் பிரித்து வைக்கின்றார். இலக்கியம் ஒரு கலை. ஆனால் அதே சமயம் அந்தக் கலை ஒரு போதுமே தனித்து இயங்க முடியாது. ஏனைய துறைகளெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். பொதுவாக இலக்கியமென்றதும் பலர் அதனைக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை உள்ளடக்கியதாக மட்டுமே கருதிக்கொண்டு விடுகின்றார்கள். அந்தத் தவறினைத்தான் ஜெயமோகனும் செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. இதனை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பதற்கு இலக்கியமென்றால் என்ன என்பது பற்றிச் சிந்தனையினைச் சிறிது திசை திருப்புவது நன்மை பயக்கும்.