1
இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. ‘ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி’ என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. ‘கச்சேரி’ ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.