நீண்ட தூரம் கடலில் நீந்திய பின் ஓய்வுக்காக அமர்வது போல், பூவிழி கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்தவள், ‘அப்பாடா…. எல்லா சிரமங்களும் இன்றோடு முடிந்துவிட்டன!’ என்று தனக்குள் கூறியவாறு பெருமூச்சு ஒன்றை வேகமாக விடுகிறாள்! பரந்து விரிந்த இவ்வுலகில்,தான் மட்டுமே எதையோ ஒன்றைப் பெரியதாகச் சாதித்து விட்டதாக எண்ணி அவள் பெருமிதம் கொள்கிறாள். அவளது சாதனைக்குப் பின்னால் பலரது உழைப்பும் உதவியும் பெருமளவில் அடங்கியுள்ளன என்ற பேருண்மையை அசை போட்டுப் பார்க்க ஒரு கணம் மறந்து விடுகிறாள்! கிள்ளான், பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில்தான் பூவிழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது.அத்தோட்டக் குழும மருத்துவமனையில்தான் பூவிழியைப் பெற்றெடுத்தார் தாயார் பொன்னம்மாள். தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டு வரை பூவிழி கல்வி கற்ற பின் கிள்ளான் பட்டணத்தில் இடை நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தாள்.
இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து, செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம். இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது. இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின. தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.
நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ‘ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல்’ என்ற செயற்பாடும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 01.10.2012 அன்று சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவுசெய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரன் அவர்களுடன், முனைவர் ஜெ. அரங்கராஜ், சுன்னாகம் நூலகர் கே. சௌந்தரராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர், இதுபோன்ற தொடர் செயற்பாட்டில் ஈடுபட நூலகம் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்புடையவர்கள் இம்முயற்சிக்கு உதவவேண்டும் என்பதும் நூலகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.