[பதிவுகள் யூன் 2009இல் , முள்ளிவாய்க்கால் சமரினைத் தொடர்ந்து வெளியான கட்டுரையின் சில பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்]…. விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி…. இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.
அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. ‘நூலகம்’ தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.