[ஜூலை 2009 இதழ் 115 மார்ச் 2010 இதழ் 123 வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை’ என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு, படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள்-]
1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், ‘இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!’, என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ‘வாழ்க்கையில் இலக்கியம்’ என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.