[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
“என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும்.
நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும்.
நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை.
என் மரணத்தின் பத்து
நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து
நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.”
மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த விகசங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப் படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ். அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே.