பாழ்நிலம் (1922)
“ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் ‘ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?’ என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: ‘நான் சாக விரும்புகிறேன்’ என்பதாகும்.” – கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு –
1. நீத்தாரைப் புதைத்தல்
ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது.
வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை
ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது.
சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில்.
குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில்
பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன.
கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த
நாங்கள்
ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம்.
பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம்.
சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள்
நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு
‘நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி’
பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில்
தங்கியிருந்தபோது ஒரு ‘ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில்
அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். ‘மேரி,
மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்’ என்றான் அவன்.
மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம்
இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.