உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனர்கள் என நாம் சிலரைக் குறிப்பிட முடியும்; அதுபோல உலகின் தலசிறந்த ஆவணப்படங்கள் எனவும் சிலவற்றை நாம் குறிப்பிட முடியும். இலத்தீனமெரிக்காவின் ஜெட்டினோ மற்றும் சொலானஸ், பிரான்சின் கிரிஸ் மார்க்கர் போன்றவர்கள் உலகின் ஆவணப்பட மரபை உருவாக்கிய மேதைகள் என்றால், அவர்கள் உருவாக்கிய எ கிரின் வித் எ கேட் (A Grin with a Cat) த ஹவர் ஆப் த பர்னசஸ் (The Hour of the Furnces) போன்ற ஆவணப்படங்களை நிரந்தரத்துவம் பெற்ற உன்னதக் கலைப்படைப்புகள் என நாம் குறிப்பிடலாம். இந்த இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசத்தக்க இந்திய ஆவணப்பட இயக்குனர் என ஓருவரைக் குறிப்பிட வேண்டுமானால், அவர் ஆனந்த் பட்வர்த்தன் எனத் தயங்காமல் குறிப்பிடலாம்; அதுபோல உலகின் தலைசிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக அவர் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படத்தையும் நாம் முன்வைக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றில் வாழ நேர்ந்த மக்கள்திரளின் ஆற்றலையும், அவர்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும், அந்த வரலாற்றில் வைத்து அவர்கள் அடைந்த தனிநபர்ப் பாடுகளையும், அவர்களது விடுதலைத் தேட்டத்தையும் பதிவு செய்தவை இவர்கள் உருவாக்கிய ஆவணப்படங்கள். கிரிஸ் மாக்கரின் எ கிரின் வித் எ கேட்(1977) நிலவிய சோசலிசம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், 1968 பாரிஸ் மாணவர் தொழிலாளர் எழுச்சியின் பத்து ஆண்டுகளின் பின் உருவாக்கப்பட்டது. சொலானஸ், ஜெட்டினோவின் த ஹவர் ஆப்த பர்னசஸ்(1968) சே குவேரா பொலிவிய மலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலைமையில் இலத்தீனமெரிக்க மக்களை நோக்கிய புரட்சிகர அறைகூவலாக உருவாக்கப்பட்டது.