(ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையில், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம்.