செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச்சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். சும்மா படமெடுப்பவர் இல்லை. தன் தொழிலைக் கலையாக உணர்பவர். அத்தகைய பதிவுகள் இவர் பொறுப்பேற்ற படங்களில் நமக்குக் காணக்கிடைக்கும். ஆனாலும், இவர் எப்படி தமிழ்த் திரைப்படத்துக்குள் நுழைந்தார்? நுழைந்து எப்படி காலம் தள்ளுகிறார்? என்ற எண்ணம் என்னில் முழுமையாக முதலிலும், “எப்படியும் எங்காவது தொடங்கத் தானே வேண்டும்?” என்ற சமாதானத்தோடு இப்போதும் உணர்ந்து வருகிறேன். சென்னைக்கு நான் குடி வந்த முதல் வருடத்திலேயே (கி.பி. 2000) செழியன் எனக்கு அறிமுகமானார். யாரோ என்னவோ என்று தான் நான் நினைத்தேன். கணையாழியில் இருந்த கவிஞரும் என்னை ஆத்மார்த்தமாக நேசித்த நண்பருமான யுகபாரதி என்னை செழியனிடம் அழைத்துச் சென்றார். அந்த முதல் சந்திப்பில் செழியனை மிகவும் கஷ்டப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஸ்டுடியோக்குள் என்னை என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் அவர் ஸ்டுடியோவின் மாடி வெராண்டாவின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, என்னிடம் pose வேண்டாமல், அவர் பாட்டில் குனிந்தும் சாய்ந்தும் தூர நின்றும், கிட்டத்தில் மண்டியிட்டும் என்னென்னவோவெல்லாம் கரணங்கள் செய்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். என்னை முதன் முதலாக இன்னொருவர் முகம் சுளிக்காது பார்க்கக் கூடும் படங்களை எடுத்தவர் செழியன்தான். மற்றதெல்லாம் ஒருமாதிரிதான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்[பது போலவும், எதையோ உற்றுக் கவனிப்பது போலவும், “பரவாயில்லையே நான் கூட இப்படி பார்க்கும்படியான தோற்றத்தில் உள்ள கணங்களை, அவை மறையும் முன் பிடித்து உறைய வைத்துவிட்டாரே. என்று மகிழ்ந்தேன். ஒரு மோசமான subject- ஐ வைத்துக்கொண்டு கூட பரவாயில்லை என்று சொல்லத் தக்க படைப்பைத் தந்துவிடுவது பெரிய விஷயம் தான்.. அப்போ, தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக சேரத் தக்க நிபுணத்துவம் உள்ளவர் தானே, சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் கிடைப்பதை வைத்துத் தானே ஒப்பேத்தவேண்டும்?
Continue Reading →