இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.
அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..! 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் ‘குத்துவிளக்கு” என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் ‘ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..” என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் ‘ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…” என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..! ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு – நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த ‘கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா..” போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய ‘பல்கலை வேந்தர்” சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!