திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது.
(1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னரும், தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகிய பின்னரும் திரு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அவர்மீதான சந்தேகத்தையே வலுப்படுத்துவதாக உள்ளது.