படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா? ஆகாதா?’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்தவர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.