– எழுத்தாளர் சயந்தனின் ‘சயந்தன்’ இணையத்தளத்திலிருந்து ‘ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்’ என்னுமிக் கட்டுரை தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’ அறிமுகத்துக்காக மீள்பிரசுரமாகின்றது. இணையத்தள முகவரி: http://sayanthan.com/ – பதிவுகள் –
தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)
புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.