மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.
கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.