மதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்…புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.