கலைஞர்கள் எமது சமுதாயத்தை இன்புற வைப்பவர்கள் என்னும் அடிப்படையில் பிறக்கும்போதே கலைமகளின் அருளைத் தமதாக்கிக்கொண்டு பிறக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக ஈழத்துக் கலைஞர்களும் திகழ்ந்துள்ளார்கள். சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர்களாகவும், மக்களால் மிகவம் மதிக்கப்பட்டவர்களாவும் அவர்கள் காணப்பட்டுள்ளனர். கலைரசிகர்களால் நன்கு காமுறப்பட்டவர்கள், பெருமைப் படுத்தப்பட்டவர்கள் நல்ல கலைஞர்கள். இசை, நடனக் கலை மரபில் ஈழத்தில் தலைசிறந்துவிளங்கிய கலைஞர்களுள் நடனக் கலை ஆசான் அமரர் ஏரம்பு சுப்பையா முக்கியமானவர். அவர் விடுத்துக் சென்ற கலை இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றது.
ஈழத்திருநாடு பன்நெடுங்காலமாக கலை இலக்கிய வளர்ச்சியில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பெற்றுவந்துள்ளது. பரதநாட்டியம், கிராமியக்கலைகள், நாட்டுக்கூத்துகள் என்பன தமிழரின் தனித்துவம் பேணப்பட்டுவந்துள்ளமையை வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொலநறுவையில் உள்ள சிவன் ஆலயத்திலும், கந்தளாயில் இருந்து விஜயராஜ ஈஸ்வரத்திலும் தேவதாசியாட்டம் அல்லது சதுராட்டம் எனப்படும் நாட்டிய வகைகள் இறை பக்தர்கள் அல்லது தாசர்கள் எனப்படுவோரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன என்பதனை ஈழத்திற்கு வருகை தந்திருந்த மொறோக்கோ நாட்டுப் பயணியாகிய இபன்பட்டுட்டா 1244ல் குறிப்பிட்ட வரலாற்றுக்குறிப்பு, மற்றும் இங்கு பதியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் அறியமுடிகின்றது. இபன்பட்டுட்டாவின் குறிப்பில் 500க்கு மேற்பட்ட தேவரடியார்கள் இருந்துள்ளனர் எனக்குறிப்பிட்டுள்ளார். சிங்கள இலக்கியங்களும் நடன, கலை நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்கள் இந்து ஆலயங்களில் இடம்பெற்றுள்ளமையை குறிப்பிட்டுள்ளன.