அனைத்துலகப் பெண்கள் நாள் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
வரலாறு
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.