ஈழத்தின் பிரதேச வரலாறு ஓர் அறிமுகம்.

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது  ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று,  ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய  ஒன்றாகும். ஆனால் அப்பற்று  மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை  நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள்  பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை.  இவ்வாய்வுகள்  மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது  ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு  ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது  ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.

Continue Reading →