9.2.2014.- எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக இருந்து கதையுங்கோ’ என்று மகேந்திரன் கேட்டுக்கொண்டான். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவாதான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு இடவசதி, சாப்பாடு, விசா பெறுவதற்கான ஆலோசனைகள்; என்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் மனம் படைத்தவர். பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ‘றெஸ்ரோரன்ட்’ ஒன்றில் வேலை செய்பவர். அங்கு பலவிதமான வேலை வாய்ப்புக்கள் வரும்போது அவற்றில் அகதியாக வரும் இளைஞர்களை ஈடுபடுத்தும் செல்வாக்கு மிக்கவர். பிரெஞ்சு முதலாளிகள் மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக வேலை செய்யக்கூடியவர்கள், கடின உழைப்பாளிகள் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.