பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்
என்று மகாகவி பாரதி பல்லாண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அவரது வாக்கிற்கு சிறந்த இலக்கணமாக வாழ்ந்த மெண்டலின் இசைமேதை ஸ்ரீநிவாஸ் தனது 45 வயதில் ஆயுளை முடித்துக்கொண்டார். ஸ்ரீநிவாஸ் என்றால் எந்த ஸ்ரீநிவாஸ்..? என்றுதான் கேட்பார்கள். மெண்டலின் என்ற மேலைத்தேய இசைக்கருவியுடனேயே தனது வாழ்நாளை செலவிட்ட இந்தக்கலைஞருடன் அந்த இசைக்கருவியின் பெயரும் இணைந்தமையால் இன்று அவரது மறைவு என்றைக்குமே அஸ்தமிக்காத அந்த இசையுடன் பேசப்படுகிறது. மேதாவிலாசம் மிக்க பலருக்கு அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது அவரது மறைவுச்செய்தியும். விவேகானந்தர், பாரதி, ஐன்ஸ்றின், போன்று உலகளவில் பேசப்பட்டவர்களும் அற்பாயுளில் மறைந்தார்கள். அந்த வரிசையில் இன்று மெண்டலின் ஸ்ரீநிவாசன். கர்னாடக இசையாகட்டும் மேலைத்தேய இசையாகட்டும் திரையிசையாகட்டும் அவற்றிலெல்லாம் சங்கமித்த மெண்டலின் வாத்தியம் உள்ளத்தை கொள்ளைகொண்டு போகும் வல்லமை மிக்கது. தனது இளம்பராயத்திலிருந்தே தனது தந்தையிடமிருந்து இந்த வாத்திய இசையை கற்று வந்து சாதனைகள் படைத்த ஸ்ரீநிவாஸ் பத்மஸ்ரீ – சங்கீத ரத்னா விருதுகளையும் பெற்றவர். கீழைத்தேய வாத்தியக்கருவிகளான தம்புரா – வீணை – கோட்டுவாத்தியம் – புல்லாங்குழல் – நாதஸ்வரம் – மிருதங்கம் – தவில் – கடம் – கஞ்சிரா – சதங்கை முதலானவற்றிலிருந்து வேறுபட்டவை வயலின் – கிட்டார் – ட்ரம்ஸ் – மெண்டலின்.